இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன.

17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின.

முதல் போட்டியில் இலங்கை அணியை, வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்-21) இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது.

அதேபோல, நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. தனது கடைசிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதவுள்ளது. அந்த போட்டி இந்திய அணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதும்.

இரு அணிகளை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி வலுவானதாகவே காணப்படுகிறது. ஆனால், ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு போட்டியில், வங்கதேசம் அணி, பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சாளர் ரிஷத் ஹொசைன் வங்கதேச அணிக்கு கூடுதல் பலம் அளிப்பவராக உள்ளார். அவருக்கு உறுதுணையாக மெஹதி ஹசன் மற்றும் முஸ்தபிஷுர் ரஹ்மான் உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான சைஃப் ஹசன் 69 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். மேலும், டஷ்கின் அஹமது மற்றும் லிட்டன் தாஸ் மீண்டும் அணிக்கு திரும்பினால், பலம் வாய்ந்த அணியாக இருக்கும்..

அதேசமயம் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஷகிப்சதா ஃபர்ஹான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல் ஃபஹர் ஜமான், முஹமது ஹாரிஸ் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பந்துவீச்சில் சைம் அயூப் மற்றும் ஷாகின் ஷா அஃப்ரடி துருப்புச் சீட்டாக இருக்கின்றனர். ஹாரிஸ் ராஃப் இக்கட்டான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆற்றல் பெற்றவராக உள்ளார்.

இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். எனவே, இன்றைய போட்டி விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *