புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில், ரவுடிகள் சிலர் தங்களுக்கு இலவசமாக மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கடை ஊழியர், மதுபானம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரவுடிகள் கடை மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
மேலும், மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள், வேறு சில கண்காணிப்பு கேமாரக்களில் பதிவாகி இருந்தன. இதனையடுத்து, அந்த ரவுடிக் கும்பலை காவல் துறையினர் கைது செயதனர்.
இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் உரிமை மாநாட்டில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வர தயங்குவதற்கு முக்கிய காரணம், தலைவிரித்தாடும் ரவுடியிசம் தான்” என்று தெரிவித்து இருந்தார். அதனை உறுதிபடுத்தும் விதமாக, நேற்று மதுபான கடையில் நடைபெற்ற இந்த காட்சிகளே சாட்சியாக அமைந்துள்ளது.