வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

JCM

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது.

இதனை எதிர்த்து ‘ஜென் எக்ஸ்’ (Zen X) 1995 முதல் 2000ஆம் ஆண்டிற்குள் பிறந்த இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு போராட்டங்களின் அலை காத்மாண்டுவிற்கு அப்பாலும் பரவியுள்ளது. மேலும் போக்காரா, புட்வால், சித்வான், நேபாள்கஞ்ச் மற்றும் பிராட்நகர் ஆகிய நகரங்களுக்கு பரவியது.

போராட்டத்தின் ஒரு வடிவமாக, இளைஞர்கள் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் 2ஆவது நுழைவு வாயில் அருகே தீ வைத்தனர். இதனையடுத்து, தீப்பிழம்புகள் விரைவாக அப்பகுதி எங்கும் பரவின. இதனால், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியே இராணுவம் நிறுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்து அதன் சில பகுதிகளை சேதப்படுத்தியதை அடுத்து, நேபாள அரசாங்கம் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது. இளம் போராட்டக்காரர்களை விரட்ட நேபாள போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், தடியடிகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதால் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது.

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தலைநகரில் நேபாள இராணுவம் நிறுத்தப்பட்டது. நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை இராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

நேபாள அரசாங்கம் நாட்டில் சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக், கடும் மோதல்களைத் தொடர்ந்து தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ததாக நேபாள காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *