தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்
தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் அரசு நிதியில் பரிசு பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிதியமைச்சகத்தில் இருந்து அறிக்கை!
புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருக்கும்போது எல்லாம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சுயேட்சை என பாகுபாடு பார்க்காமல் அரசு செலவில் தீபாவளி பண்டிகையின் போது 500 பட்டாசு பாக்ஸ் மற்றும் 500 ஸ்வீட் பாக்ஸ்களை வாரி வழங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மகிழ்ச்சியடைய செய்வார். கடந்த ஆண்டு இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆனால் நித்துறை அனுமதிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. மேலும் தொகுதி மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எம்எல்ஏக்கள் கொடுக்க வேண்டும் என்றால், தங்கள் சொந்த செலவில் கொடுக்குமாறு நிதித்துறை பதிலளித்தது. இதையடுத்து சொந்த செலவில் எம்எல்ஏக்கள் வாங்கி கொடுத்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி உள்ளிட்ட விழாக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க அனுமதி இல்லை என்ற மத்திய அரசின் தனி செயலர் விகே. சிங் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, நிதி ஒழுக்கத்தை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசியமற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அவ்வப்போது அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது. இந்த முயற்சிகளைத் தொடரவும், பொதுவான வளங்களை விவேகமாகவும் பயன்படுத்துவதன் நலனுக்காகவும், இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பிற சார்ப் நிறுவனங்கள் தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளுக்கான பரிசுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களுக்கு எந்தச் செலவும் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நித்துறை செயலர் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் உத்தரவு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதால் அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் அரசின் செலவில் தீபாவாளி பண்டிகை மற்றும் இதர பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


