SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுபடியும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், இம்மாதம் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை நிரப்பி பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிலர் தவறுதலாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை முகாம்களுக்கு கொண்டு வந்தபோது, அவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒயிட்னர் பயன்படுத்தி திருத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், படிவம் சரியாக இருந்தாலும் ஆதார ஆவணங்கள் கொண்டு வரும்படி வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இது தேர்தல் ஆணையம் முன்பே வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு முரணாகும்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தில், SIR படிவத்துடன் எந்த ஆவணங்களையும் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெளிவு செய்துள்ளார். வாக்காளர்கள், கணக்கெடுப்பு படிவங்களில் தங்களது விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியுடன் சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

