புதுச்சேரியில் மாநில அளவிலான ‘கலா உத்சவ் – 2025 : 83 மாணவர்கள் திறமை வெளிப்பாடு
புதுச்சேரியில் மாநில அளவில் நடைபெற்ற ‘கலா உத்சவ் – 2025’ போட்டியில் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்து 83 மாணவ–மாணவிகள் பங்கேற்று தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இடைநிலை மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் ‘கலா உத்சவ்’ போட்டிகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சமகர சிக்ஷா பிரிவு மாவட்டத் தளப் போட்டிகளை நடத்தியது. அதில் முதலிடத்தைப் பெற்றவர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
அதன்படி, புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்ற மாநில மட்டப் போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனிநடனம், குழுநடனம், இசைக்கருவி மீட்டல், வாய்ப்பாட்டு, நாடகம், பாரம்பரிய கதை சொல்லல் உள்ளிட்ட பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கலா உத்சவ் 2025 போட்டிகளை ஜவகர் பால்பவன் தலைமையாசிரியரும் நோடல் அதிகாரியுமான மணிவேல் ஒருங்கிணைத்தார். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் பூனேவில் நடைபெற உள்ள கலா உத்சவ் போட்டியில் பங்கு பெற உள்ளனர்

