காமராஜ் நகர் சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உரிமை பத்திரம் வழங்காமை – மக்கள் கடும் அதிருப்தி
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் பொன்விழா நகர ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், இங்கு வசிக்கும் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப்படவில்லை என குடியிருப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், காலப்போக்கில் வீடுகளில் பல பகுதிகள் இடிந்து விழுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டைச் சுற்றி புதர்கள் அதிகம் வளர்ந்து கிடப்பதால், பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவது வழக்கமான பிரச்சினையாகிவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலை குறித்து பல முறை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புக் கொண்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குடியிருப்போரின் குற்றச்சாட்டு.
“இந்நிலை மேலும் தொடர்ந்தால், நாங்கள் அனைவரும் வரவிருக்கும் தேர்தலை புறக்கணிப்பதோடு, ரேஷன் கார்டுகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புகளின் பாதுகாப்பு, உரிமை பத்திரம் வழங்குதல், மற்றும் சுற்றுப்புற சுத்திகரிப்பு போன்ற முக்கிய கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டுமென குடியிருப்போர் வலியுறுத்துகின்றனர்.

