2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் குடில்-விழிப்புணர்வு முயற்சி
புதுச்சேரி:
2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் நோக்கில், வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசித்து வரும் சுந்தரராசு, அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சமூக விழிப்புணர்வை மையமாக வைத்து கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர், இந்த ஆண்டு 13-வது முறையாக வித்தியாசமான கருப்பொருளில் கிறிஸ்துமஸ் குடிலை வடிவமைத்துள்ளார்.
இந்து மதத்தை பின்பற்றி வரும் இவர், இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து குடிமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாக கொண்டு, தேசியம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் சுமார் 500 கட்சி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டுகளில், ஒரு கன செ.மீ அளவில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடிலுக்காக “அசிஸ்ட்” உலக சாதனை விருதை பெற்றுள்ளார். மேலும், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி காய்கறிகளால் செய்யப்பட்ட குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட குடில், மரம் வளர்ப்போம் என்ற கருப்பொருளில் தேங்காய்களால் செய்யப்பட்ட குடில், சிறுதானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 25 வகையான தானியங்களால் செய்யப்பட்ட குடில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 700 புத்தகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட குடில் என பல்வேறு சமூக விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த சமூக சேவையை பாராட்டி, உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் சுந்தரராசுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிலில், அரசியல் கட்சி கொடிகளை கொண்டு கூரை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நிலப்பகுதியில் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் குடிலின் ஒரு பகுதியில் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), விவிபாட் இயந்திரம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப கிறிஸ்துமஸ் தாத்தா வாக்களித்த பிறகு விரலில் மை காட்டுவது போலும், கையில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போலும் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

