மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டி?

மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அத்தொகுதியில் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து எடப்பாடி பழனிசாமி நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தொடங்கினார். அவருடன் ஒரே வாகனத்தில் பயணித்து பாஜகவின் தமிழிசை செளந்தரராஜனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எனினும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளும்கூட அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் அத்தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரனும், அவினாசியில் எல்.முருகனும், கோவை வடக்கில் வானதி ஸ்ரீனிவாசனும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *