இலங்கை கண்டியில் பெரும் மண்சரிவு: 14 வீடுகள் புதைந்துள்ளது உயிர் தப்பிய இளைஞர்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள அலவத்துகொடை நகரின் ரம்புக்கேஹெல்ல மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கனமழையால் மலைச்சரிவு உருவாகி பல வீடுகள் மண்ணில் புதைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவில் இருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் என்ற இளைஞர், அந்த திகிலான தருணத்தைப் பற்றி பேசும் போது,
“பெரிய சத்தமொன்று கேட்க, நான் கதவைத் திறந்தேன். அடுத்த நொடியில் பூகம்பம் போல குலுங்கியது. என் கண்முன்னே ஒரு வீடு முழுவதும் மண்ணுக்குள் மறைந்து போனதை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கடும் மழை பெய்ததால் திடீரென வெடிப்பு போன்ற சத்தத்துடன் வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்து கிடந்தன. சில நிமிடங்களுக்குள் மேலும் பெரிய சத்தம் எழுந்து மலைப்பகுதி முழுவதும் மண்சரிவு ஏற்பட்டது.

பிரதேச மக்கள் அளித்த தகவலின்படி, சுமார் 14 வீடுகள் முழுவதுமாக மண்ணில் புதைந்துள்ளது. அந்த வீடுகளில் சுமார் 40 பேர் வரை வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வீடுகளோடு பல வாகனங்களும் மண்ணின் அடியில் புதைந்துள்ளன.

ஆனால், இதுகுறித்த சரியான உயிரிழப்பு மற்றும் சேத விபரங்களை போலீஸார் மற்றும் கிராம சேவகர் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், மழை காரணமாக பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *