பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்பு கருதியே இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்த நிலையில், வனத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

