சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்
சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் .
தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று பூங்காவில் குறைந்தது 30 காகங்கள் இறந்தும், சில காகங்கள் உயிருக்கு போராடிய நிலையிலும் காணப்பட்டன.
காகங்கள் இறப்பதற்கு விஷம் கலந்த உணவு அல்லது மாசுபட்ட தண்ணீர் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை பொதுமக்கள் யாரும் காகங்களை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

