சஞ்சு சாம்சன் அரையிறுதியில் விளையாடத் தடையா?

டி20 உலகக்கோப்பையில் தனது அபார ஆட்டத்தால் இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனுக்கு அதே அரையிறுதி போட்டியில் விளையாட ஐசிசி தடை விதிக்க வாய்ப்புள்ளதா?

சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர் கம்பேக் குறித்த தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து, இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்தார்.

ஒரு பக்கம் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்க, மறுபக்கம் சஞ்சு சாம்சன் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்னை அடித்த பின் ஹெல்மெட்டை வீசிவிட்டு முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார். தனது வெற்றிக் கொண்டாட்டமாக இதனை செய்ததாக பின்னர் அளித்த பேட்டியிலும் சஞ்சு தெரிவித்தார். இந்த வெற்றிக் கொண்டாட்டம் ஐசிசியின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விட, அவர் ஹெல்மெட்டைத் தரையில் வீசியதுதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது “விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்” என்று கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டை ‘எறிந்ததாக’ கருதப்பட்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஐசிசி நடத்தை விதிகளின்படி, வீரர்கள் மைதானத்தில் முறையான ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். பிரிவு 2.2-ன் கீழ் கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் வீரர்களுக்குத் தண்டனை வழங்கப்படலாம். இந்த பிரிவின் கீழ் சமீபத்தில், பிப்ரவரி 18-ம் தேதி ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி, ஆட்டமிழந்த பிறகு ஹெல்மெட்டை வீசியதற்காக அவருக்கு ஒரு ‘டிமெரிட்’ (Demerit) புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக வீரர்களுக்குத் தடை விதிக்கப்படுவதில்லை. ஐசிசி நடத்தை விதிகளின்படி, இத்தகைய செயல்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாகவே கருதப்படுகின்றன. கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை விட, உற்சாகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீரர்களிடம் நடுவர்கள் பெரிய கண்டிப்பு காட்டுவதில்லை.

லெவல் 1 குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை என்பது, போட்டி ஊதியத்தில் 50% வரை அபராதம் மற்றும் 2 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். இந்த நிலையில் போட்டித் தடை என்பது அரிதானது. டிமெரிட் புள்ளி என்பது ஒரு வீரரின் நற்பெயருக்கு வழங்கப்படும் ‘கருப்புப் புள்ளி’ போன்றது. ஒரு வீரர் செய்யும் தவறு எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்து (Level 1 முதல் Level 4 வரை), அவருக்கு 1 முதல் 4 வரை டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் 4 டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால் அவருக்குத் தடை விதிக்கப்படும்.

எனவே, சஞ்சு சாம்சன் மீது இதுவரை அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக இது போன்ற கொண்டாட்டங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பதால், அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி மார்ச் 5 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *