க*சா பயன்பாடு அதிகரிப்பு – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை கண்ணகி நகர் அருகே க*சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக , அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், குற்றப் பின்னணி உள்ளவரை முறையாக கண்காணிக்கத் தவறியதால் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் க*சா புழக்கமே இல்லை என அமைச்சர்கள் கூறும் நிலையில், இந்த சம்பவம் திமுக அரசு போதைப் பொருள் விற்பனையை ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை நடத்தி, அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் காவல்துறையையும் தமிழக அரசையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

