சென்னையில் காங்கிரஸின் அமைதிப் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு “வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி–ஜி ராம் ஜி)” என மாற்றியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, இந்த முடிவு ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்று வருவதுடன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றுள்ளனர்
போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டு, மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், திட்டத்தின் பெயரை மீண்டும் மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

