திருக்கார்த்திகை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் மேலும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகச் சிறப்பிப்படும் திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்தாண்டும் மிகுந்த பக்தி பேரரவத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலையார் உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும்.
இதற்கான முன்னோடியான நிகழ்வுகள் ஏற்கெனவே துவங்கியுள்ளன. நேற்று இரவு நகரின் ஊர்காவல் தெய்வமான துர்ககையம்மன் உற்சவத்துடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு அண்ணாமலையார் கோவிலில் பிடாரியம்மன் உற்சவம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அழகிய ஆலங்காரமும் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. பின்னர் பிடாரியம்மன் சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அருளினார்.
நாளை இரவு அண்ணாமலையார் கோவிலில் விநாயகர் உற்சவமும் அதனைத் தொடர்ந்து மாடவீதியுலாவும் நடைபெற உள்ளது. மேலும் வரும் 24ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 7.25 மணிக்குள் தனுசு லக்னத்தில் திருக்கார்த்திகை கொடியேற்றம் நடைபெற உள்ளது.
திருவிழா நாட்கள் முழுவதும் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் திரளால் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

