‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ – மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
பட்ஜெட் உரையின் போது வருமான வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் என்றும், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதியில் இருந்து மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார். சாதாரண மக்கள் எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் வகையில், நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும் என்றும், எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி தாக்கல் படிவம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு முழுமையான வருமான வரி விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான TCS (Tax Collected at Source) வரி 5% இலிருந்து 2% ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற தற்போதைய நடைமுறை தொடரும். வருமான வரி தாக்கலின் போது பொய்யான கணக்குகள் அல்லது தவறான தகவல்கள் வழங்கப்பட்டால், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதே நேரத்தில், வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு இருக்காது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துகளின் வரி குறைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

