நேபாள பெருவெள்ளம்: 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்; 105 இந்தியர்கள் மாயமானதாக தகவல்
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
ராசுவா பகுதியில் பனிப்பாறை சூழ்ந்த ஏரியில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறியதே திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, வெள்ளத்தில் காணாமல் போன சுற்றுலாப் பயணிகள் குறித்த பட்டியலை நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 105 இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளுக்கான சாலை மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், சில பகுதிகளில் மீட்பு ஹெலிகாப்டர்களைக் கூட தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, புனிதப் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள திமுரே பகுதியில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் 20 பேர் மட்டுமே இதுவரை தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யாத நிலையில், திபெத் எல்லைப் பகுதியில் பெய்த கனமழையே இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முழுமையான சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மாயமான இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து அவர்களது உறவினர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

