“மக்கள் மனதில் மகுடம் சூடியதா ‘மகுடம்’?”
சென்னையில் மெடிக்கல் ரெப்பாக மனைவி, மகன், மகளுடன் அமைதியாக வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). குடும்பத்தின் ஆசைக்காக கார் வாங்கும் அவரின் வாழ்க்கை, விசாகப்பட்டினத்தில் கேங்ஸ்டராக இருக்கும் லிங்காவின் (விஷால்) கடத்தல் சம்பவத்துடன் எதிர்பாராத விதமாக இணைகிறது. கிருபாகரனுக்கும் லிங்காவுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மையக்கதை.
இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் விஷால், ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். நடிகராகவும் இரண்டு கதாபாத்திரங்கள், மூன்று தோற்றங்களில் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கிருபாவாக அமைதியான நடிப்பையும், லிங்காவாக ஆக்ரோஷமான நடிப்பையும் ஓரளவு சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
துஷாரா, தம்பிராமையா, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் வருகின்றனர். இதில் அஞ்சலி, அன்னபூரணி கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருந்தாலும், காட்சியமைப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் இல்லை.
சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கும் ஒருவனின் கனவாகத் தொடங்கும் கதை, இறுதியில் வழக்கமான பழிக்குப் பழி கதையாக சுருங்கிவிடுகிறது. கார் மீது நடக்கும் துப்பாக்கிச் சூடு வரை ஓரளவு சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதை, அதன் பிறகு பொறுமையை சோதிக்கிறது. டேப் ரெக்கார்டர் காட்சி, லிங்காவின் ஒன் மேன் ஆர்மி ஆக்ஷன் காட்சிகள், ‘முத்து மணிமாலை’ பாடலின் பயன்பாடு உள்ளிட்ட சில விஷயங்கள் இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கலாம்.
மேலும், படத்தின் முக்கியமான திருப்பங்களைக் கூட எளிதாக யூகிக்க முடிவது பெரிய குறை.
மொத்தத்தில், நல்ல ஆக்ஷன் த்ரில்லருக்கான முயற்சி இருந்தாலும், வலுவான கதை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் ‘மகுடம்’ எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை.

