CSK-வுடன் 18 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்த பிளெமிங்
ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் வீரராக இணைந்த ஸ்டீபன் பிளெமிங், 2009-ஆம் ஆண்டு முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகளாக அவரது பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்று சாதனை படைத்துள்ளது.
அவரது வழிகாட்டுதலில் சென்னை அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளது.
இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது பயணம், என் பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். மறக்க முடியாத பல வெற்றிகளை நாம் இணைந்து கொண்டாடியுள்ளோம். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமான அணியாக இருக்கும்” என்றார்.
சென்னை ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பிளெமிங், சிஎஸ்கே உடனான தனது 18 ஆண்டுகால பயணத்தை தற்போது நிறைவு செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும், பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தங்களது பயணத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சுமுகமான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

