சிட்னி துப்பாக்கிச்சூடு: துணிச்சலுடன் தாக்குதலாளரை கட்டுப்படுத்திய அகமத்-அல்-அகமது, பிரதமர் பாராட்டு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், தாக்குதலாளரை துணிச்சலுடன் எதிர்த்து மற்றவர்களின் உயிரை காப்பாற்ற முயன்ற அகமத்-அல்-அகமதுவை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பாராட்டினார்.
சம்பவத்தின்போது துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்திய நபர் மீது பாய்ந்து, அவரது துப்பாக்கியை பிடுங்க முயன்ற அகமத்-அல்-அகமது, அந்த முயற்சியில் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அகமத்-அல்-அகமதுவை சந்தித்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவரது துணிச்சலையும் மனிதாபிமானத்தையும் வெகுவாக பாராட்டினார். “மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, தன் உயிரை ஆபத்தில் ஆழ்த்திக் கொண்ட உங்களுக்கு, ஒவ்வொரு ஆஸ்திரேலியர் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகமத்-அல்-அகமதுவின் தைரியமான செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும் மரியாதையும் பெற்றுள்ளது.

