சீனாவுக்கு மேலும் 100% வரி: அதிரடி அறிவிப்பு – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக வர்த்தகப்போரில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
டிரம்ப் தனது அறிக்கையில், “சீனா உலக வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே சீனாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதோடு முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30% வரி இருந்த நிலையில், இப்போது அது 130% ஆக உயருகிறது. இந்த முடிவு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடன், 2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, “எனது நோபல் பரிசை வெனிசுலாவின் துன்பப்படும் மக்களுக்கும், எனக்கு உறுதியான ஆதரவை அளிக்கும் அதிபர் டிரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “மரியா எனது சார்பாக நோபல் பரிசு பெற்றதாக கூறியுள்ளார். ஆனால் நான் அவளிடம் அதை கேட்டதில்லை. அவர் மிகுந்த தைரியமானவர், அவருக்கு உதவி செய்து வருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.