வங்கதேசத்தில் அரசியல் பதற்றம்: மாணவர் இயக்கத் தலைவர் ஹாடி சுட்டுக் கொலை
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். அந்த போராட்டங்களை முன்னணியில் இருந்து வழிநடத்திய மாணவர் இயக்கத்தின் தலைவராக ஷெரீஃப் உஸ்மான் ஹாடி செயல்பட்டார்.
இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் வங்கதேச பொதுத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் டாக்காவில் தனது தேர்தல் பிரசாரத்தை ஹாடி தொடங்கியிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் மாணவர் இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முக்கிய நாளிதழ்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

