சமூக வலைதளங்களில் இசைஞானியின் புகைப்படம் இனி ‘காப்புரிமை கண்காணிப்பு’, ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு.
தமிழ் சினிமாவில் இசையின் வரலாறே பேசும் பெயர் இசைஞானி இளையராஜா. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி மூலம் அறிமுகமான அவர், இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து, 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இவ்வளவு பெரும் இசை அந்தஸ்தை பெற்ற இளையராஜாவின் புகைப்படங்களும், பாடல்களும் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் அவரது உருவமும், படைப்புகளும் தங்களது தளங்களில் அனுமதி இல்லாமல் இடம் பெற்றுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், அனுமதியில்லாமல் பயன்படுத்தி வந்ததன் மூலம் பெற்ற வருமான விவரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இளையராஜாவின் புகைப்படங்களை இணையம் உள்ளிட்ட எந்த தளத்திலும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் தொடர்ச்சியான விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது

