தோட்டா தரணிக்கு செவாலியர் விருது- இந்திய கலை உலகுக்கு பெருமை!
சென்னை:
பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பாலமுரளிகிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், கல்கி கோச்சலின் ஆகியோர் பெற்று இருந்தனர். இப்போது தோட்டா தரணி ஆறாவது இந்தியராக இணைந்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த தரணியின் தந்தை தோட்டா வெங்கடேஸ்வர ராவ், 1950களில் பிரபலமான ஆர்ட் டைரக்டர். சிறு வயதிலேயே கலை ஆர்வம் மிக்க தரணி, கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், பிரான்ஸ் அரசாங்க ஃபெலோஷிப் பெற்று அங்கேயே கலை வடிவமைப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பிரெஞ்சு, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி, குடிசைகள் முதல் அரண்மனைகள் வரை வித்தியாசமான செட்டிங் வடிவமைப்புகள் மூலம் பாராட்டுப்பெற்றவர். குறிப்பாக ‘அர்ஜுன்’ திரைப்படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் செட் வடிவமைப்பில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர்.
பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் இந்த பெருமைமிக்க விருதை, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் நாளை சென்னை அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் வழங்க இருக்கிறார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தோட்டா தரணிக்கு திரைப்படத் துறையினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.

