அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்
அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்த செங்கோட்டையன், இதுவரை அமைதியாக இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர தீர்மானித்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) பனையூரில் உள்ள வெற்றிக் கழக அலுவலகத்திற்கு சென்று, விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 11.45 மணியளவில் சென்னை தலைமைச் செயலலகம் வந்து சபாநாயகர் மு. அப்பாவை சந்தித்த அவர், தனது கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சமீபத்தில் ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும் ராஜினாமா செய்து திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது செங்கோட்டையனும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை விடுத்துள்ளார்.

