ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை
சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற புதிய உச்ச விலையை எட்டியது. அப்போது தங்கம் விலை விரைவில் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்ற எதிர்பார்ப்பும் உருவானது. ஆனால் அதனைத் தொடர்ந்து தங்க விலையில் சற்று சரிவு காணப்பட்டு, கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.89,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்க விலை தொடர்ந்து குறையும் என மக்கள் நம்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை ஏற்றம் கண்டுவருவது நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

