கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நகல் அனுப்பி வருகிறது.
கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி யூபிக் மீட்டர் அளவு மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்ட விரோதமாக செயல்பட்டு 185 செங்கல் சூளைகள் மூட உத்தரவிட்டது. உடனடியாக செங்கல் சூளைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மூடி சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக செங்கல் சூலைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து அதன் உரிமையாளர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெரி நிபுணர்கள் நான்கு மாதங்கள் ஆய்வு செய்து ரூபாய் 3,000 கோடி அபராதம் விதிக்கலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தனர்.
அபராத தொகையை மறுபரிசீலனை செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.அதில் சூழல் பாதிப்புகளுக்காக செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது.ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் எவ்வளவு ரூபாய் அபராதம் என தனி, தனியாக தொகை குறிப்பிடப்பட்டு இருக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அறிக்கை நகல்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பி வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சுமித்ரா கூறும் போது
டெரி அமைப்பு அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. அதை சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகளுக்கு தெரிவிக்க பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியதால், அறிக்கை நகல் அனுப்பி வருகிறோம் என்றும் இனி செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து அபராதம் இறுதிச் செய்யப்படும் என்றார்.

