சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; சராசரி மக்களின் சிரமங்கள் எனக்கு தெரியும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி:
மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், “நாங்கள் பணத்துடன் பிறந்தவர்கள் அல்ல. என் தந்தை ரப்பர் தோட்டத் தொழிலாளி. எங்கள் குடும்பத்தின் தினசரி வாழ்வாதாரம் வெறும் 10 ரூபாய்தான். ஆட்டோவும் பேருந்திலும் பள்ளிக்குச் சென்றவன் நான். படிப்படியாக வாழ்வில் உயர்ந்துள்ளதால், சராசரி மனிதர்களின் வேதனைகள் எனக்கு நன்கு தெரியும்” என கூறினார்.
இறைவனின் ஆசீர்வாதத்தால் இன்று நல்ல நிலையில் இருப்பதாகவும், அதற்குப் பதிலாக நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் நல்லது செய்ய வேண்டிய கடமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; புதுச்சேரியை நம்பர் 1 மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், “குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வரவில்லை” என பரந்த பார்வையுடன் அரசியல் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
புதுச்சேரி மக்கள் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாடத்திட்ட மாற்றங்களால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும், ஆசிரியர்கள் போதிய பயிற்சியின்றி தவித்து வருவதாகவும் கூறினார். மேலும், போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி வருவதாகவும், அரசின் பல திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும், வந்த நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அரசாங்கம் முறையாக செயல்படவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
“புதுச்சேரியை ஏன் சிங்கப்பூர் போல மாற்றக் கூடாது?” என கேள்வி எழுப்பிய ஜோஸ் சார்லஸ் மார்டின், கடல் சார்ந்த வரலாற்று பெருமைகளை உலகிற்கு காட்டும் நோக்கத்துடன் கடற்கரையில் கட்சி தொடக்கம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். வரலாற்றில் தமிழர்கள் கலை, மொழி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்றும், நமது மன்னர்களை பிற நாட்டினர் புகழ்ந்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
இன்றைய சூழலில் குடிநீர் பற்றாக்குறை, மருத்துவத் துறையில் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் மக்களை பாதித்து வருவதாகக் கூறிய அவர், படித்த இளைஞர்கள் வேலை இல்லாததால் தவறான பாதைக்கு மாறுகின்றனர் என்றும் கவலை தெரிவித்தார். இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதே கட்சியின் நோக்கம் என அவர் கூறினார்.
கூடிய விரைவில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்றும், பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய திட்டங்கள் முன்னுரிமை பெறும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்றும், புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றுவது சாத்தியம் என்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நம்பிக்கை தெரிவித்தார்.

