சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!
சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் இளமையாகவும், முதுமையாகவும் சேர்ந்த இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
வடசென்னை உலகத்தைச் சுற்றிய கதையின் இன்னொரு கோணமாக இத்திரைப்படம் அமைகிறது எனப் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதே படத்தைத் தெலுங்கு மொழியிலும் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நாட்கள் நீடிக்கும் இந்த அட்டவணைக்குப் பிறகு, சென்னை நகரில் சிறப்பு செட்கள் அமைக்கப்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

