திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்
சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார்.
ராஜேந்திரன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
ராஜேந்திரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கிடையே நில சம்பந்தப்பட்ட தகராறு நீண்டநாளாக இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பழிவாங்கும் மனோபாவத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு சாதாரண நிலத் தகராறுக்கே ஆளும் கட்சியின் நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் நிலை ஏற்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை எவ்வாறு பாதிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற சூழலில் தமிழ்நாட்டிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமை எப்போது உறுதியாகும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

