கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது.
சமீப காலமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி – அல்லமலை கிராமம் செல்லும் நடைபாதையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற கரடி மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உடனடியாக உயிரிழந்தது.
காலை நேரத்தில் அப்பகுதி மக்கள் சம்பவத்தை கண்டு, உடனடியாக மின்சாரத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோத்தகிரி வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முதுமலை விலங்கு மருத்துவ குழுவை அழைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது 6 வயது ஆண் கரடி என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.