சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் இந்த இரண்டு இன நாய்களையும் புதியதாக வாங்கி வளர்ப்பது அனுமதிக்கப்படாது.
இந்த தடையை மீறி பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை புதிதாக வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஏற்கனவே உரிமம் பெற்று வளர்க்கப்பட்டு வரும் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது, கட்டாயமாக கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
சமீப காலங்களில் ஆபத்தான நாய் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இவ்விதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் மனிதர்களுக்கும், பிற செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதே மாநகராட்சியின் நோக்கமாக உள்ளது.

