தகாத உறவு தகராறில் பெண்ணை வெட்டிய இளைஞர்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியில் தகாத உறவை மையமாகக் கொண்ட தகராறில் பெண்ணை வெட்டி காயப்படுத்திய இளைஞர், பின்னர் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தொழுவைச் சேர்ந்த சித்ரா (36) என்பவர், 2020 ஆம் ஆண்டு கணவர் ஜான்சன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதன் போது அருகில் வசிக்கும் மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த இந்த உறவில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், சித்ரா ஒரு மாதத்திற்கு முன்பு கருப்பண்ணனுடன் தொடர்பை முறித்துக் கொண்டார். இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், இனி எந்தவித தொடர்பும் இல்லையென இருவரும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

எனினும், சித்ராவுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற கருப்பண்ணன், கடந்த வாரம் அவரிடம் பேச வந்ததாக தகவல். ஆனால் சித்ரா மறுத்ததால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று காலை சித்ரா தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது, அங்கு வந்த கருப்பண்ணன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் பேரில் சித்ராவின் கை மற்றும் கால்களில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சித்ராவின் இடது கை கடுமையாக காயமடைந்தது.

அவரது நிலைமை மோசமடைந்ததை கண்ட கருப்பண்ணன் உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, சித்ராவை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர், சம்பவம் குறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்த அவர், அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று தானே சரணடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *