திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரையிறக்கம்
திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முன்பக்க இறக்கை உடைந்ததாலும், எரிபொருள் லீக் ஆனதாலும் பைலட் அவசரமாக விமானத்தை நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பைலட் – பயிற்சி பெறுபவர் இருவரும் பாதுகாப்பாக மீட்பு
விமானம் தரையிறங்கிய உடனே அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைலட் மற்றும் பயிற்சி பெறுபவரை பாதுகாப்பாக கீழிறக்கி ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர்.
சேலத்தில் இருந்து பறந்த பயிற்சி விமானம்
விசாரணையில் கிடைத்த தகவலின்படி, சேலத்தில் உள்ள விமான பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி விமானம் இன்று காலை சேலத்தில் இருந்து காரைக்குடி, திருச்சி வான்வெளி வழியாக பயிற்சி மேற்கொண்டு வந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பைலட் விமானத்தை நிலை தப்பாமல் வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், முன்பக்க இறக்கை உடைந்திருக்கலாம் என்றும், எரிபொருள் கீழே சொட்டத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.
மலைப்பகுதி அருகே பறக்கும் போது இறக்கை சேதமடைந்திருக்கலாம்?
திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜு தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பைலட் ராபர்ட் மற்றும் பயிற்சி பெறுபவர் ஹாசிமிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அந்தப் பகுதி மலைச்சரிவு நிறைந்ததனால், விமானம் பறந்தபோது மலை மேடுக்களோ மரக்கிளைகளோ தவறுதலாக விமானத்தைத் தொட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாலை 5 மணிக்கு மேலும் ஆய்வு
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மாலை 5 மணிக்கு சம்பவ இடத்தை சோதனை செய்து:
- இறக்கை எதனால் உடைந்தது?
- மலை மீது மோதி சேதமா?
- அல்லது தொழில்நுட்ப கோளாறா?
என்பதற்கான தகவலை பெறவுள்ளனர்.
விமானத்தை திருச்சி விமான நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை
சிறிய ரக பயிற்சி விமானத்தை நெடுஞ்சாலையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்ல பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
அனுமதியுடன் நடந்த அவசர தரையிறக்கம்
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து பைலட் திருச்சி விமான நிலையத்துடன் அவசரமாகத் தொடர்பு கொண்டதாகவும், சட்டப்படி அவசர காலங்களில் நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்க அனுமதி இருப்பதால் விமான நிலையம் அவர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் அதிகாரிகளின் தகவலில் கூறப்பட்டுள்ளது.
சாலையில் கையால் தள்ளி நிறுத்தப்பட்ட விமானம்
விமானம் நெடுஞ்சாலையின் நடுவில் நின்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பைலட் இணைந்து விமானத்தை கையால் தள்ளி சாலையின் ஓரமாக நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
பைலட்டின் சாதுரியமான முடிவு மற்றும் திறமையான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு பயங்கர விபத்து போன்ற சூழ்நிலை தவிர்க்கப்பட்டதாக திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜு தெரிவித்தார். சம்பவத்திற்கான முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

