மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி செல்லும் 1C எண் அரசு பேருந்து மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது. இதில் நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) கண்டக்டராக பணியாற்றி வந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது படியில் நின்ற மாணவர்களை மேலே ஏறச் சொன்ன முனியப்பனின் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மாணவர்கள் அழைத்துக்கொண்ட சிலர் பாலக்குடி கிராமம் அருகே பேருந்தை வழிமறித்து, முனியப்பனை கீழே இழுத்து தாக்கினர். இதில் அவர் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர் சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை நடத்தி வருவதாகவும், முறிவு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். சம்பவத்தை அடுத்து சில நேரம் அந்த வழியாக சென்ற நான்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பின்னர் மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
படியில் பயணம் செய்வது ஆபத்தானது என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், நடத்துனர் மீது மாணவர்களை சார்ந்தோர் தாக்குதல் நடத்தியது பொதுமக்களில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.