மழைநீர் வடிகால் பணிகள்: சரியாக மூடப்படாத சாலைகளால் மக்கள் அவதி
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாக பல சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அவை முழுமையாக மூடப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதை சரிசெய்ய மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் நகரின் பல பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சரிவர சீரமைக்கப்படாமல் இருப்பது போக்குவரத்துக்கும், நடைபாதை பயணிகளுக்கும் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
பெசன்ட் நகர் 4வது மெயின் ரோட்டில் உள்ள அண்ணா அரசு பள்ளி அருகே சுமார் நான்கு மாதங்களாக தோண்டப்பட்ட நடைபாதை இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள் பலமுறை மனு அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை குறித்து தொடர்பு கொண்ட போது, பெசன்ட் நகர் மண்டல அதிகாரிகள் தெரிவித்ததாவது: “பெசன்ட் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளன; மூன்றாவது கட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மீதமுள்ள பணிகள் மழைக்காலத்திற்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் குழாய் இணைப்புகள் முடிவடையாததால் சாலைகள் திறந்தபடி உள்ளன; விரைவில் அனைத்து பணிகளும் மீண்டும் தொடங்கப்படும்” என்றனர்.
பெசன்ட் நகர் மட்டுமல்லாது, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று சாலைகள் சீரமைக்கப்படாதது குறித்து மக்கள் புகார்கள் எழுப்பி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் இதுவரை தெளிவான விளக்கம் அல்லது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் பொதுமக்களில் அதிருப்தி நிலவுகிறது.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, சாலைகள் சீரமைப்பில் தாமதம் ஏற்பட்டிருப்பது குறித்து மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். எனினும், சாலைப்பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

