திருச்செந்தூரில் விடிய விடிய கனமழை!

திருச்செந்தூரில் விடிய விடிய இடி மின்னலுடன் பல மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் சிவன் கோயில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. திடீரென இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய, பலத்த மழை பெய்தது.
நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, குமாரபுரம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.
இரவு நேரத்தை தாண்டியும், விடிய விடிய பலத்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை எங்கும் முக்கிய வீதிகள் முழுதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் திருச்செந்தூர் பந்தல் மண்டபத்தில் உள்ள சிவன் கோவில் வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் திருச்செந்தூர் பேருந்து நிலையம், பேருந்து பணிமனை போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்பொழுது பெய்து வரும் கனமழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.