புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மதுக்கடை திறப்புக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!


புதுவையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
வில்லியனூரில் பாரதிநகர், ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மதுபான கடை (ரெஸ்டோ பார் ) ஒன்று திறக்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுவால் இளைஞர்கள், குடும்பங்கள், சமூக அமைதி ஆகியவை பாதிக்கப்படும் எனக் கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் செய்து கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, “இந்த பகுதியில் புதிய மதுபானக் கடை வராது, அதற்குப் பொறுப்பு எங்களது” என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் அமைதியாக கலைந்தனர். அதே நேரத்தில், “மீண்டும் மதுக்கடை திறக்க முயன்றால், மீண்டும் சாலை மறியல் செய்து கடுமையான போராட்டம் நடத்துவோம்” என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.