பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நரிக்குறவர் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் மனவேதனைக்கும் விரக்திக்கும் உள்ளான நரிக்குறவர் சமூக இளைஞர்கள், தரமற்ற முறையில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட அரசு வீடுகளை கற்களால் தாக்கியதாகவும், இதில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வீடு என்ற நீண்ட நாள் கனவு சிதைந்த நிலையில், இனிமேலும் தாமதமின்றி தரமான வீடுகளை கட்டித் தர வேண்டும் என நரிக்குறவர் பழங்குடி சமூக மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *