புதுவையில் தொடரும் விபத்துக்கள் – மக்கள் அச்சம்
புதுவையில் தொடர் சாலை விபத்துகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த விக்னேஷ், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஊருக்கு வந்திருந்த நிலையில், நண்பர் தனுஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கேரளாவை சேர்ந்த சஞ்சய் குமாரின் பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், விக்னேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோல், கிருமாம்பாக்கம் கந்தன்பேட்டை சேர்ந்த பிஆர்டிசி நடத்துனர் சதீஷ், நள்ளிரவில் பைக்கில் சென்றபோது சாலையோர மணல் மேட்டில் பைக் சறுக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இதே போல் மேலும், பல்வேறு இடங்களில் அதிவேகமாகவும், சாகசத்தில் ஈடுபட்ட 18 இளைஞர்கள் பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

