முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி
“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.
சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றினார். மனித உரிமைகளின் முக்கியத்துவம், அது உலகளவில் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்வியின் சக்தி குறித்து தனது உரையில் விரிவாக பேசினார்.
அவ்வுரையின் போது, தனது அரசியல் கட்சியான லட்சிய ஜனநாயகக் கட்சியை அறிமுகப்படுத்தி, புதுவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவே இந்த உரை நிகழ்த்தப்படுவதாக அறிவித்தார். வரலாற்றில் நடந்த மனித உரிமை மீறல்களை எடுத்துக்காட்டிய அவர், எந்த ஒரு சமூகம், நாடு அல்லது மதத்தவரை குற்றம் சொல்வது அணுகுமுறை அல்ல என்றும், மாறாக பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆறு அறிவுகளுடன் பிறந்த மனித இனம், கடவுளின் படைப்பை மதித்து, பிற உயிர்களுடன் இணைந்து வாழ பழக வேண்டும் என அவர் கூறினார். வரலாற்றில் நடந்த கொடுங்கோல் ஆட்சிகளால் கோடான கோடி உயிர்கள் பலியானதை நினைவுகூர்ந்த அவர், இலங்கைத் தமிழர்கள் முதல் இஸ்ரேல்-பாலஸ்தீனம் வரை மனித இழப்புகள் நீடித்துக் கொண்டிருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்தார். போர்கள் பல தலைமுறைகளுக்கும் ஆழமான நினைவுக் காயங்களை உண்டாக்கும் என்பதால், வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
உண்மையான அன்பும் மனிதநேயமும் நிலை கொண்டிருந்தால், மனித உரிமைகளைப் பற்றி இன்று விவாதிக்க வேண்டிய காலம் கூட வராது என்று அவர் கூறினார். உலகத்தில் சமத்துவம், நீதி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் தான் இவ்வமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
கல்வி, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, ஆன்மீக ஞானம் ஆகியவை மேம்பட்டால் தான் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என அவர் வலியுறுத்தினார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2007 இல் கூறிய “இதயத்தில் நீதியிருப்பின் உலகில் அமைதி நிலைக்கும்” என்ற கருத்தை மேற்கோள் காட்டி, தலைவர் என்பது வெளிப்படையான நேர்மையுடனும் அன்புடனும் செயல்படும் நபராக இருக்க வேண்டும் என்றார்.
புதுவைச் சேர்ந்த தமிழனாகவும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவராகவும் பேசும் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுவையை
• பின்லாந்து போல மகிழ்ச்சிகரமான நாடாகவும்
• பூடான் போல கார்பன் நெகடிவ் மாநிலமாக,
• டென்மார்க் போல ஊழலற்ற ஆட்சியாகவும்,
• சிங்கப்பூர் போல பொருளாதார சுதந்திரம் மற்றும் புதுமையில் முன்னேற்றமாகவும்,
• அயர்லாந்து போல மனித மேம்பாட்டில் சிறந்ததாக மாற்றுவேன் என உறுதியளித்தார்.
புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 மாத குழந்தை, தடுப்பூசி கண்காணிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழந்தது குறித்தும் கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமாக 7 பேர் உயிரிழந்தது குறித்தும் ₹500 கோடி போலி மருந்து, ஊழல் குறித்தும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள் குறித்தும் மது கலாச்சாரம், கல்வியை தொடராமல் வெளியேறும் மாணவர்கள் குறித்தும் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பது குறித்தும் குறிப்பிட்டார். இவை யாவும் புதுவையில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகவும் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.இதற்கு ஒரே தீர்வாக பாரபட்சமற்ற நீதி தேவை என்பதை அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நீதியை நிலை நாட்டிய மனு நீதி சோழன் குறித்து குறிப்பிட்டு பேசினார். மேலும் வள்ளலாரின் “தன்னிடைய உலகம் தழைக்க எண்ணுவதே தான் உயர்வாம்.” உலகம் முழுவதும் நலம் வேண்டுதல் – அதுவே உண்மையான மகத்துவம் என்ற கருத்தை குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

