மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், புதிய மின் கம்பம் அமைப்பதற்கு பதிலாக மின்துறை ஊழியர்கள் மரக் குச்சிகளை வைத்து மின் கம்பங்களுக்கு முட்டுக் கொடுத்து இணைத்துள்ளனர்.
உலகமே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு மரக் குச்சிகளை மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார பாதுகாப்பை பொருட்படுத்தாமல் இப்படியான அலட்சியம் நடந்தது குறித்து மக்கள் கண்டனம் தெரிவித்து, உடனடியாக மரக் குச்சிகளை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.