“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இன்று அதிகாலை 5:45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. “ஹர ஹர சிவாய நம ஓம் ” என பக்தர்கள் விண்ணதிர கோஷம் எழுப்பினர். காலை 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நேற்று எட்டாம் கால பூஜை விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *