கோவில் நிலத்தில் அங்கன்வாடி கட்டிடம்? பூமி பூஜைக்கு எதிர்ப்பு!
புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணி நேற்று காலை நடந்தது. ஒப்பந்ததாரர், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் இதில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து, அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படும் இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கோரிமேடு எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. கே.எஸ்.பி ரமேஷ் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்டுமான பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருப்பதாகவும். அதிகாரிகள் ஆய்வு செய்தபிறகு, கட்டுமான பணி குறித்து முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால், பூமி பூஜை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் பந்தலும் அகற்றப்பட்டு, அதற்கான பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

