RR கேப்டன் ஆகும் ஜடேஜா? – ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு என்ன?

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. சில முக்கிய வீரர்கள் அணிகள் மாறும் நிலை ஏற்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில் அதிகம் பேசப்படும் விஷயம் — ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான டிரேட் விவகாரம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாண்மையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு விலக முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை வாங்க பல அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மிகுந்த தீவிரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்கும் நிபந்தனைக்கு-“சஞ்சுவுக்கு பதிலாக ஜடேஜா” – சிஎஸ்கே சம்மதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், “அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வருவாரா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்காலத்தை நினைத்து, இளம் வீரரைத் தான் கேப்டனாக தேர்வு செய்யும். அந்த வகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலே சரியான தேர்வு. அவர் இளம் வயதில் (23) இருந்தாலும் திறமையுடன் விளையாடி வருகிறார். இப்போதே கேப்டனாக நியமித்தால், அனுபவமும் வளர்ச்சியும் கிடைக்கும். எனவே, ஜடேஜா அல்ல, ஜெய்ஸ்வாலே ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *