தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது திடீரென தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து வெடித்தது. அப்போது எதிர் திசையில் விழுப்புரம் சாலை வழியாக தடுப்பை உடைத்துக் கொண்டு வந்தது. அப்போது அந்த திசையில் வானூர் வட்டம் இடையான்குளம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தனியார் பேருந்து கமலக்கண்ணன் மீது மோதி அருகே இருந்த சாலையோர பள்ளத்தில் விபத்துக்குள்ளானது. மேலும், இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
விபத்து ஏற்பட்டவுடன் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

