அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 2  கல்லூரி மாணவர்கள் கைது!

அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக இரு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், டிஜிபி உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை விசாரித்தபோது, அவர்களிடமிருந்து 215 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (22) மற்றும் மணவெளி நேத்தாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20) எனத் தெரியவந்தது. இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *