கழிவறை கட்டும் திட்டத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது!

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டரை கைது செய்துள்ளனர்.
2016 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தில், கழிவறைகள் கட்டப்படாமல் ரூ.59.89 லட்சம் தொகை முறைகேடாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மோசடி மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அப்போது அரியாங்குப்பம் கொம்யூனில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய விவேகானந்தன் (தற்போது பொதுப்பணித்துறையில்), ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ராஜசேகரன் (தற்போது சுகாதாரத்துறையில்), மேலும் 8 கான்ட்ராக்டர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
சீனியர் எஸ்.பி. இஷா சிங் மற்றும் எஸ்.பி. நல்லாம் கிருஷ்ணராயபாபு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு ஞானகுரு அம்பேத்கர் மற்றும் போலீஸ்காரர் விக்னேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று லாஸ்பேட்டை வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் இருந்து ராஜசேகரனை கைது செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.