தீபாவளி முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசு குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பண்டிகை காலங்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவில் மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் அதிக சத்தம் எழுக்கும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதையும் சோதனை செய்தனர்.
மேலும், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு அல்லது விற்பனை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.